சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் ஏற்படும் கடுமையான பின்விளைவுகள்

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் ஏற்படும் கடுமையான பின்விளைவுகள்
உடலுக்கு தேவையான குளுக்கோஸ், வைட்டமின்கள், ஹார்மோன்கள், அமினோ அமிலம் போன்றவற்றை சீராக தக்கவைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா போன்ற கழிவு பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் பணியை சிறு நீரகம் செய்து வருகிறது.

உடலில் நீரின் அளவை சம நிலையில் பராமரித்தும், ரத்தத்தை சுத்தப்படுத்தி அதிலிருக்கும் கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியையும் மேற்கொள்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது. சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிறுநீரக பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

இல்லாவிட்டால் நாளடைவில் எந்த வேலையையும் செய்யாத அளவுக்கு சிறுநீரகம் செயலிழந்து போய்விடும். தொடக்க அறிகுறியாக சிறுநீரை பிரித்தெடுத்து வெளியேறுவது குறையும். பசியின்மை, வாந்தி, கை, கால்களில் வீக்கம், கடுமையான சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

அதிலும் சிறுநீரக கல் பிரச்சினை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் ஆரம்பத்தில் கடுகு போல் படிய தொடங்கி உருண்டையாக திரள ஆரம்பித்துவிடும். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறினால் அது சிறுநீரக கல்லின் அறிகுறியாக இருக்கும். ஆதலால் சிறு நீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தீராத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புற்றுநோய் போன்றவற்றாலும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.

சிறுநீரை ஒருபோதும் அடக்கி வைக்கக் கூடாது. தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோல் உப்புகள் நிறைந்த ஊறுகாய், நொறுக்கு தீனி வகைகள், அப்பளம், புளித்த மோர், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Source maalaimalar.com

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.