டெங்கு வைரசை நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்துவது ஆய்வில் உறுதி: சித்த மருத்துவர்கள் விளக்கம்

டெங்கு வைரசை நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்துவது ஆய்வில் உறுதி: சித்த மருத்துவர்கள் விளக்கம்
சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடா தொடை, மணப்பாகு வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளை தமிழக அரசே பரிந்துரைத்து வருகிறது.

இந்த நிலையில் நிலவேம்பு குடிநீர் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று செய்திகள் பரவின. இது தொடர்பான சந்தேகங்களுக்கு சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கத்தின் ஆணையர் மோகன் பியாரே, இணை இயக்குனர் மருத்துவர் பார்த்திபன், ஆயுர் மருத்துவத்துக்கான மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் பிச்சையாகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலவேம்பு குடிநீரில் உள்ள 9 மூலிகைகளும் மருந்து மற்றும் அழகு சாதன சட்டத்தின்படி வி‌ஷ மருந்துகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரும் இதே சட்டத்தின் கீழ் தரமான மருந்து தயாரிப்பு முறைகளின்படி தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

நிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசுக்கு எதிராக செயல் புரிவதை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் மற்றும் சர்வதேச நடப்பு ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

நிலவேம்பு குடிநீரால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 132 பேருக்கு குடிநீர் கொடுத்ததில் 52 பேருக்கு காய்ச்சல் தணிந்து ரத்த ஓட்டமும் அதிகரித்துள்ளது. 45 பேருக்கு காய்ச்சல் தணிந்து தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்க வைக்கப்பட்டது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 218 நோயாளிகளில் 158 பேருக்கு காய்ச்சல் தணிந்து தட்டணுக்கள் உயர்ந்துள்ளன. 42 பேருக்கு காய்ச்சல் தணிந்து தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்க வைக்கப்பட்டது.

பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் குறித்து பீதி அடைய தேவையில்லை. சித்த மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று நிலவேம்பு குடிநீரை பருகலாம்.

கடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கி பயன்படுத்தக்கூடாது. நிலவேம்பு குடிநீர் சூரணம் என்று பெயரிடப்பட்ட பொடியையே வாங்க வேண்டும். அவற்றிலும் உரிமம் பெற்றதற்கான விவரங்கள், தயாரிப்பு தேதி, குறியீட்டு எண்கள் இடம்பெற்றுள்ளதா? என்று பரிசோதித்து வாங்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் சூரணத்தை கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே குடிக்க வேண்டும். பொடியாக உட்கொள்ள கூடாது. கசாயம் தயாரித்த 3 மணி நேரத்தில் குடிக்க வேண்டும். அதன் பிறகு அதை குடிக்கக் கூடாது. புதிதாக தயாரித்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

source  maalaimalar

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.