பதட்டத்தின் சில அறிகுறிகள்

பதட்டத்தின் சில அறிகுறிகள்
நமது டென்ஷன், பதட்டம், மனஉளைச்சல் இவை நம் உடலில் பல விதமாக வெளிப்படுத்தும். உடலில் ஏதோ உதறுவது போல் உள்ளே இருக்கும். நெஞ்சு வலிக்கும். மூச்சு வாங்கும். இப்படி பல பாதிப்புகளை வெளிப்படுத்தும். இந்த பதட்டம் என்பது என்ன? இது ஒரு வகையான பயம், மனசவுகர்யமின்மை, ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்ற கற்பனை பயம். இதனை ஆய்ந்து நம்மிடமிருந்து இதனை நீக்கிக் கொள்ளாவிடில் இது மிகப்பெரிய பாதிப்பாக உடலைத் தாக்கி விடும்.

பதட்டத்தின் சில அறிகுறிகள் :

* பலருக்கு கூட்டத்தினைக் கண்டால் பீதி ஏற்படும். ஏதோ காலில் செருப்பு கழண்டு விட்டது போல் தோன்றும். சிலருக்கு கூட நான்கு பேர் இருந்தாலே பீதியாக இருக்கும். இவர்களால் சமூகத்தில் சாதாரணமாக வலம் வர முடியாது. இப்படி பல உதாரணங்களை கூறிக் கொண்டே செல்லலாம். சிலருக்கு பீதி அதிகரித்து அதிகம் வியர்க்கும். கை-கால் படபடக்கும். நெஞ்சு வலி ஏற்படும்.

* இரவில் முறையான தூக்கமே இராது. பலர் இரவு 2-3 மணி வரை விழித்திருந்து பின் சோர்வாகி 2-3 மணி நேரம் தூங்குவார்கள். இது உடல் நல-மன நல பாதிப்பினை வெகுவாய் ஏற்படுத்தி விடும். நீங்கள் அதிக சோர்வுடன் இருந்தும் உங்களால் தூங்க முடியாது. உங்கள் மூளை இரவிலும் ஓய்வில்லாமல் ஏதோ நினைக்கின்றது என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தொடர்ந்தால் வயிற்று வலி, வாந்தி, தசைகளில் வலி என பாதிப்பு நீண்டு கொண்டே போகும்.

* சிலருக்கு திடீரென ஏதேனும் ஒரு அச்சமான சம்பவம் நிகழும் பொழுது வெகுவாய் மூச்சு வாங்கும். கை-கால்கள் வலுவிழந்து போகும். இச்சமயத்தில் அமைதியாய் நிதானமாய் மூச்சை உள் வாங்கி, வெளி விட்டு பழகுவதே பாதிப்பிலிருந்து காக்கும்.

* சிறிய சத்தம், டி.வி. சத்தமாக வைத்தல், சத்தமாய் பேசுவது இவை பாதிப்பு உடையவருக்கு இருதய படபடப்பினை ஏற்படுத்தும். சிலருக்கு காபி கூட இருதயத்தினை வேகமாய் வேலை செய்ய வைக்கும். பாதிப்பு தருபவைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதே பாதுகாப்பாக அமையும்.

* மிக அதிக சோர்வு, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, எதிலும் எரிச்சல் இருப்பினும் ஏதோ ஒரு புன்னகையை முகத்தில் போலியாக ஒட்டிக் கொள்பவர்கள் அநேகர். இவர்கள் இதற்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை பெறாவிடில் விரைவில் பலவித பாதிப்புகள் ஏற்பட்டு நோயாளி ஆகி விடுவர்.

* வறண்ட வாய் மனஉளைச்சலின் முதல் அறிகுறி. மனஉளைச்சல் இருக்கும் பொழுது நமது உடல் சில மிக முக்கிய மற்ற வேலைகளை நிறுத்தி விடுகின்றது. இவ்வாறு இருக்கும் பொழுது ஓரிரு தம்ளர் நீர் குடியுங்கள். ஹெர்பல் டீ போன்றவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் மீண்டும் சகஜ நிலையினை அடையும்.

* குளிர்ந்த பாதம், வியர்க்கும் கைகள் இருக்கலாம். காரணம் உங்கள் கை, கால்களுக்கு வரும் ரத்த அளவு குறைந்திருக்கலாம். மனது அமைதிப்படும் பொழுது உடல் சாதாரண நிலைக்கு வந்து விடும்.

* வயிற்றுப் பிரட்டல் ஏற்படும்.

* கை-கால் மற்றும் தசைகளில் வலி இருக்கும்.

சரி, இத்தகையப் பாதிப்பு ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் ஓரிரு முறை இவ்வாறு இருந்தால் மூச்சு பயிற்சி, மனம் அமைதி படுதல் மூலம் சரி செய்து விடலாம். ஆனால் தொடர்ந்து இவ்வாறு இருந்தால் மருத்துவ உதவி மிக அவசியம்.

source maalaimalar

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.