மருந்தே இல்லா இயற்கை மருத்துவம்

மருந்தே இல்லா இயற்கை மருத்துவம்
இன்று மனித சமுதாயத்தில் பல்வேறுபட்ட நோய்கள் உருவாகி பலரும் அவதியுறுவதைக் காண முடிகின்றது. ஏற்கனவே இருக்கும் நோய்கள் போதாது என்று பல புதிய நோய்கள் உருவாகி மக்களை மேலும் அல்லல் பட வைக்கின்றன. இதற்கு நாம் உண்ணும் உணவுகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

நோய்களை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மற்றும் நோயே வராமல் தடுக்கவும், உணவு முறைகள் மூலமே ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும். அப்படி இருக்கையில் உணவு முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் மருந்து மருந்து என மருந்தை நம்பி வாழ்வது எப்படி இருக்கிறது என்றால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்குஅலைவது போல் இருக்கிறது.

உணவுகளின் மூலமே நிரந்தர குணத்தைப் பெற முடியும் என்பது உள்ளங்கையில் நெல்லிக்கனி போல பரவலாக அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இருந்த போதிலும் இன்னமும் மக்கள் இந்த சாதாரண விஷயத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாத வகையில் நோய் களுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு கஷ்டப்படு கிறார்கள்.

பஞ்ச பூதங்களான விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய இவற்றால் உலகம் எப்படி இயங்குகிறதோ அதேபோலதான் மனித உடலும் இந்த பஞ்ச மூலகங்களால் இயக்கப்படுகின்றன. இந்த ஐம்பெரும் மூலகங்களால் உருவாக்கப்பட்டதே இந்த மனித உடல். உடலில் உள்ள பஞ்ச மூலகங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது உடலில் நோய், வலி, வியாதி போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

இந்த பஞ்ச மூலகங்களையே மருத்துவமாக கையாண்டு செயல்படுத்தும் முறையே இயற்கை மருத்துவமாகும். “உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது இதன் முக்கிய விதி ஆகும்.

மருந்துகள் இதில் கையாளப்படுவதில்லை என்பதால் மருத்துவம் பார்க்கும்போது பின் விளைவுகள், பக்க விளைவுகள் போன்ற தொல்லைகளும் ஏற்படுவதில்லை. அதனால் எல்லா நோய்களுக்கும் இதில் எளிய, தொல்லை ஏதுமில்லாத சிகிச்சை உண்டு எனலாம். இயற்கை மருத்துவம் வெற்றிகரமாக வளர்ந்து நோய்களை அகற்றி வளமான வாழ்க்கையையும், மகிழ்ச்சிதரும் நலமான வாழ்க்கையையும் மக்களுக்கு அளித்து வருகிறது.

தமிழகத்தில் புதுக்கோட்டை யில் வாழ்ந்த பெரியவர் திரு. கு.இலட்சுமண சர்மா அவர்கள் தான் இயற்கை மருத்துவத்தை வளர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘தமிழகத்தின் இயற்கை மருத்துவத்தின் தந்தை’ என்று கூட அவரைச் சொல்லலாம். அதுபோல் இந்தியாவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்தி ரேலியாவிலும், இன்னும் பல மேலைநாடுகளிலும் மிக வேகமாக இயற்கை மருத்துவம் வளர்ந்து வருகிறது.

இயற்கை மருத்துவம் எல்லா மருத்துவ முறைகளுக்கும் நட்பு மருத்துவமாக வளர்ந்து வருவதால் ஆங்கில மருத்துவர்களும் மற்ற மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை பாராட்டுகின்றனர். பொதுவாக எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருக்கிறோம் என்ற எண்ணம் உங்கள் மனதிலிருப்பதை உணருவீர்கள். ஆனால் இயற்கை மருத்துவ நிலையங்களுக்கு நோயாளியாக நீங்கள் வரும்போது உறவினர்கள் வீட்டுக்கு வந்ததாகவும், நண்பர்கள் வீட்டுக்கு வந்ததாகவும்தான் இருக்கும்.

இதற்கு காரணம் இங்கு மருந்துக்கே வேலை கிடையாது. இங்கு கொடுப்பதெல்லாம் உணவுகளே ஆகும். இந்த உணவுகள் உங்களுக்கு ஒருவேளை புதிய ரக உணவு களாக இருக்கலாம். அல்லது நீங்கள் மறந்த உணவுகளாக இருக்கலாம். அல்லது உங்களுடைய மனதுக்குப் பிடிக்காத உணவுகள் என்று ஒதுக்கி விட்ட உணவுகளாகக்கூட இருக்கலாம்.

ஆரம்ப காலத்தில், விரும்பி சாப்பிடும் உணவுகளை எதிர்காலத்தில் நோய்க்கு ஆளான பிறகு நீங்கள் ஒதுக்கி விடும்படியாக ஆகிவிடும். அல்லது மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடக் கூடாது என்று சொல்லி விடும்படியாகி விடும்.

உதாரணம்: நிறைய கிழங்குகளையும், கொட்டை வகைகளையும், விரும்பி சாப்பிடுபவர் களுக்கு ஒரு காலத்தில் மூட்டுவலி வருகிறது. மூட்டுவலி குணமாக வேண்டுமெனில் முதலில் கிழங்கு வகைகளையும், கொட்டை வகைகளையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லி விடுகிறோம். இப்படி பல நோய்களுக்கு உதாரணங்களை சொல்ல முடியும்.

அதேபோல் ஆரம்ப காலத்தில் உங்களுக்கு பிடிக்காத உணவுகள் என்று சிலவற்றை ஒதுக்கி இருப்பீர்கள். எதிர்காலத்தில் நோய் வந்த பிறகு, நீங்கள் ஒதுக்கிய உணவுகளையே நீங்கள் சாப்பிட வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. உதாரணமாக உங்களுக்கு முள்ளங்கி பிடிக்கவில்லை எனில் உங்களுக்கு மூட்டு வலிக்கு முள்ளங்கியைத்தான் அதிக அளவில் சாப்பிடச் சொல்கிறோம். கசப்புச் சுவைப் பிடிப்பதில்லை என்பதால் அறுசுவையில் மற்ற சுவைகளான இனிப்பு, காரம், உப்பு, துவர்ப்பு, புளிப்பு இவற்றை ஒவ்வொரு வேளையும் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்கள். பிறகு ஏதேனும் நோய்களால் அவதியுறும்போது நீங்கள் சாப்பிடும் மருந்துகள் அத்தனையும் கசப்புச்சுவைகளாகவே இருப்பதை உணர்வீர்கள்.

ஏன் இந்த தடுமாற்றம்? ஒழுங்காக ஆரம்பத்தில் இருந்தே கசப்புச் சுவையுடைய சுண்டைக்காய், அகத்திக்கீரை, பாகற்காய், வேம்புக்கீரை போன்றவற்றை சாப்பிட்டிருந்தால் இப்போது கசப்புச் சுவையுள்ள மருந்துகளை நீங்கள் சாப்பிட வேண்டியிருக்காது அல்லவா? நீங்கள் விரும்பி சாப்பிட்ட உணகளே இப்போது உங்களுக்கு பத்தியமாக இருக்கின்றன. நீங்கள் ஒதுக்கி விட்ட உணவுகளையே இப்போது மருந்துகளாக சாப்பிடுகிறீர்கள்.

நீங்கள் மறந்த உணவு களை ஞாபகப்படுத்தி யும், நீங்கள் விரும்பிய உணவுகளை ஒதுக்கச் சொல்லியும் சொல் கிறோம். மேலும் உங்களுக்குள்ள நோய் களுக்கு ஏற்றவாறு சில உணவுகளை பட்டியல் செய்து சாப்பிடச் சொல்கிறோம். அதேபோல் நீங்கள் தெரியாமல் சாப்பிட்டு வந்த உணவுகளை நிறுத்தவும் சொல்கி றோம்.
அதனால்தான் நீங்கள் இயற்கை மருத்துவ நிலையங் களுக்கு வரும்போது, உங்களுக்கு ஏதோ மருத்துவமனைகளுக்கு செல்கிறோம் என்ற எண்ணமே உருவாவ தில்லை. மருந்தே இல்லாமல் அனைத்து நோய்களையும் உணவின் மூலமாகவே குணமாக்கும் இயற்கை மருத்துவத்தை எப்படி ஒரு மருத்துவமுறை என்று சொல்ல முடியும்? ஆனால் நோய்களை குணமாக்குவதால் இயற்கை மருத்துவத்தை ஒரு மருத்துவமுறை என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.

எனவேதான் இயற்கை மருத்துவம் நாடு, இனம், ஜாதி வேறுபாடு இன்றி உலகம் முழுவதும் மக்களிடையே வெகு வேகமாக பரவி பிரசித்தி பெற்று வருகிறது.
இன்றைக்கும் சரி, அன்றைக்கும் சரி, ஏன் என்றென்றும் உயிருள்ள ஜீவராசிகளையும், மனித இனத்தையும் காப்பாற்றும் முதல் டாக்டர் சூரியனே ஆகும். சூரிய வெளிச்சம் படாத செடி, கொடியினங்கள் பெரும்பாலும் இறந்து விடுகின்றன. சூரிய வெளிச்சம் மறைக்கப்படும்போது பெரும்பாலும் வாதம், பித்தம், கபம் போன்ற சீற்றங்களால் பலர் நோயாளிகளாகின்றனர். எனவே சூரிய வெளிச்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சூரிய குளியலை செய்து வர வேண்டும்.

சூரியனுக்கு அடுத்தாற்போல் மிகப்பெரிய டாக்டர் மனித உடலே ஆகும். இறைவனால் படைக்கப்பட்ட இந்த உடல் தேவையான அனைத்து பஞ்ச பூத சக்திகளையும் தானா கவே பெற்று விடுகின்றது. தாகம் எடுக்க வைப்பது உடலின் வேலை, தாகத்தை தணிப்பது மனிதனின் வேலை. பசியை உருவாக்கும் இந்த உடலின் பசியைத் தணிக்க வைக்க வேண்டியது நடது கடமை.

அதேபோல் எது எது எவ்வப்போது மனித உடலுக்கு தேவை என அறிந்து செயல்படுவதும் இந்த மனித உடலுக்குத் தெரியும். ஒரு ஆண் குழந்தைக்கு சில குறிப்பிட்ட வருடங்கள் கழித்து முகத்தில் மீசையை அரும்ப வைப்பதும், தாடி முடிகளைத் தோற்றுவிப்பதும், குரல் வளத்தை மாற்றுவதும், விந்து சுரத்தலும் நீங்கள் பார்த்து வருகிறீர்கள்.

அதேபோல் பெண் குழந்தை களுக்கும் சில குறிப்பிட்ட ஆண்டுகள் கழிந்த பிறகு பூப்படையச் செய்தலும் உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்படுவதும் அனைவருக்கும் தெரிந்ததே.

அதேபோல் உடலில் உப்பு தேவைக்கு அதிகமாக சேர்ந்தால், விக்கல், வீக்கம், தினவு போன்ற அறிகுறிகளாக உணர்த்தும். அப்போதே நாம் ஜாக்கிரதையாக உணவில் உப்பு குறைத்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சர்க்கரை அளவு உடலில் அதிகமானால் உடலில் தினவு, அடிபட்ட பிறகு புண் ஆறாமலிருத்தல், ஆண்மைக்குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற குறைகளை உணர்த்தி உனக்கு சர்க்கரை நோய் வரப்போகிறது என்று உடல் உஷார்படுத்தும்.

உணவுக் குழலுக்கு பதிலாக மூச்சுக்குழலில் உணவு சென்றால் உடனே தும்மல் வருவதும் இதுவே. ரத்தத்தில் சீத்தளம் அதிகமானால் சளியாக வருவதும் இதுவே. புண்ணில் இருந்து சீழ் வெளியேற்றப்படுவதும் இதுவே. இவ்வாறு இன்னும் பல விஷயங்கள் இயற்கையாகவே நம் உடலே நமக்காக போராடி நம்மை பாதுகாக்க முயல்வதை இப்போது புரிந்து கொள்ளலாம். எனவே உடலைப் பேணி பாதுகாக்க முயல்வோம்.

அதேபோல் கருவுற்ற தாயிடம் குழந்தை பெறுவதற்கு முன்பு தாய்ப்பால் வெளி வருவதில்லை. குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பாலை சுரக்கின்றாள். இவ்வாறு இந்த மனித உடல் இயற்கையிலேயே தன்னைத்தானே கவனித்து காப்பாற்றும் செயலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இயற்கையிலேயே உடலானது தன்னைத்தானே பேணிப் பாதுகாத்துக் கொள்ளும்போது மனித மனமும், இயற்கை வழி நின்று இந்த உடலுடன் ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் ஐம்பெரும் மூலகங்களான விண், மண், காற்று, தீ, நீர் ஆகியவற்றுடன் ஐக்கியமாகி இருக்கும் இயற்கை உணவுகளை உண்டு நோய் நொடியின்றி வாழலாம்.

SOurce maalaimalar.com

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.