GURU PEYARCHI PALANGAL 2018 TO 2019 IN TAMIL – கடகம்

GURU PEYARCHI PALANGAL 2018 TO 2019 IN TAMIL – கடகம்

அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

கலங்கி வருபவர்களின் கவலைகளைத் தீர்ப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து நன்மைகளை அள்ளித் தரவிருக்கிறார். இனி புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். அடிப்படை வசதி வாய்ப்புகள் உயரும். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சிந்தனையில் தெளிவும், செயலில் விவேகமும் காணப்படும். கருத்துவேறுபாடு காரணமாக மனக்கசப்புடன் இருந்த கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தாய்வழி உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் அறிவுரையை பிள்ளைகள் ஏற்றுக்கொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள் இனி ஏற்படக்கூடாது என்பதில் விழிப்பு உணர்வுடன் இருப்பீர்கள். உங்களைப் பற்றிக் குறை கூறிய உறவினர்கள் மனம் மாறி வலிய வந்து பேசுவார்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்ததை முடிப்பீர்கள். வெற்றியாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேக வைபவத்தை முன்னின்று நடத்துவீர்கள். தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

11-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதரர்களுடன் ஒற்றுமை வலுப்படும். பணவரவு உயரும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், பணிச் சுமையாலும் கூடுதல் பொறுப்புகளாலும் பதற்றம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தின் காரணமாக நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண்பழி ஏற்படும். கடன் பிரச்னைகளை நினைத்து கலக்கம் ஏற்படும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர் பயணங்கள், வீண் செலவுகள், சளித் தொந்தரவு, கழுத்துவலி, வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காண்பது நல்லது.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6-ம் வீட்டில் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், அடிக்கடி வாகனம் பழுதாகி செலவு வைக்கும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் இருப்பது நல்லது.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் செல்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தடைப்பட்ட விஷயங்கள் முடிவடையும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய வேலையாள்களை மாற்றுவீர்கள். இதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்று, மறுபடியும் பெரிய பதவியில் அமரும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் தவறுகளை இதமாகப் பேசித் திருத்துவீர்கள். இயக்கங்களில் முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு:

படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு:

எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படைப்புகள் பாராட்டும் பரிசும் பெறும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். படைப்புத் திறன் அதிகரிக்கும்.

இந்த குருமாற்றம் தொட்டதெல்லாம் துலங்கச் செய்வதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும்.

பரிகாரம்:தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் அங்கமங்கலம் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஶ்ரீநரசிம்ம சாஸ்தாவை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நல்லது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.