Date :26/09/2017 Time: 11:48 Am
சேலம்: தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான பயிற்சி நேற்று, நான்கு மையங்களில் தொடங்கியது.
மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் மூலம், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு கட்டமாக நடத்தப்படும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி வரையிலான, படிப்பு செலவு முழுவதும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்படும் இத்தேர்வில், இதுவரை முதல்கட்ட தேர்வில் கூட, அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை. இத்தேர்வுக்கான வழிமுறைகளும், அதற்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கே தெரியாததும் ஒரு காரணம். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இடைப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜலகண்டாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு மையங்களில், நேற்று பயிற்சி தொடங்கியது. காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து நான்கு நாட்களும், பின் தேர்வு நடக்கும் நவ., 5 வரையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் என, 12 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா, 120 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
Source Dinamalar |